காதைகரப்பு

மிறைக்கவிகளுள் ஒன்று.ஒரு செய்யுள் முடிய எழுதி, அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத்தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப்பாடுவது ‘காதை கரப்பு’ என்னும் சித்திரகவி எனத் தண்டியலங்காரமும்முத்துவீரிய மும் கூறும். இதனைக் ‘கரந்துறை பாட்டு’ எனவும் ‘கரந்துறைசெய்யுள்’ எனவும் முறையே வீரசோழியமும் மாறனலங்கார மும் கூறும். அவை‘கரந்துறை செய்யுள்’ என்று தண்டி யலங்காரமும் இலக்கண விளக்கமும்கூறும் சித்திரக் கவியைக் ‘காதை கரப்பு’ என மாற்றிக் கூறும்.மாறனலங்காரம் ஈற்று மொழியின் முதலெழுத்தை விட்டு ஈற்று மொழியின்ஈற்று உயிர்மெய்யைத் தொடங்கிக் கணக்கிடும்.வீரசோழிய உரையும் மாறலனங்காரமும் கூறும் காதை கரப்புக்குஎடுத்துக்காட்டாகக் ‘கரந்துறை பாட்டு’க் காண்க. (தண்டி. 98; வீ. சோ.181 உரை; மா. அ. 288; இ. வி. 690.)