கழுமலம் என்னும் பெயருடைய ஒரூர் சேரமன்னன் குட்டுவன் என்பவனுக்குரியது என்று சங்க இலக்கியம் கூறுகிறது. பெரும்பூட் சென்னி என்ற மன்னனின் வரலாற்றோடு இக் கழுமலம் என்ற ஊர் கொடர்புடையது என்றும் கூறுகிறது. சேரனுக்குரிய கழுமலம் என்னும் ஊரை முற்றி, அதன் கண்ணிருந்த கணையன் என்னும் தலைமைப் படைத்தலைவனுட் பட அவ்வூரைக் கைப்பற்றித் தன் நாட்டோடு கூட்டியவன் பெரும்பூட்சென்னி என்னும் சோழமன்னன். பழையன் சோழ மன்னனுடைய படைத்தலைவன். இவன் நன்னன் முதலிய ஆறு படைத்தலைவர்களும் தத்தம் படையோடு கூடியிருந்த பாசறையைப் படை கொண்டு தாக்கப் பெரும்பாலோரைக் கொன்று வீழ்த்திப் பின்னர் அப்பகைவர் படைக் கலனால் விழுப்புண் பட்டு மாய்ந்தனன். இக்களம் கண்டு பெரும் பூட்சென்னி என்னும் சோழ மன்னன் வெகுண்டு எழுந்து கழுமலம் என்னும் ஊரைத்தாக்கி ஆங்கிருந்த கணையன் என்னும் சேரமன்னனுடைய படைத் தலைவர்க்குந் தலைவனாகிய மறவனையும் அக்கழுமலம் என்னும் ஊரையும் கைப்பற்றினன் என்பது வரலாறு) சோழ வளநாட்டில் திருக்கழுமல வளநாடு என்று ஒன்று இருந்ததாகவும் அதன் தலைநகரமே கழுமலம் என்றும் கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தின் தலைநகரமாகய சீர்காழிக்குக் கழுமலம் என்ற ஒரு பெயரும் இருந்தது என்று கருதப்படுகிறது. இவ்வூர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்திருப்பதால் சோழர்களின் பட்டத்து யானையை இங்கே கட்டியிருப்பது வழக்கம் என்றும், ‘*கழுமலத்தியாத்த களிறு” என்ற பழமொழிப் பாட்டுத் தொடர் இதையே குறிக்கிறது என்றும் கருதுகின்றனர். சோழநாட்டுக் கழுமலம் ஒரு காலத்தில் சேரர் ஆட்சியில் இருந்து பெரும்பூட் சென்னியால் மீட்கப்பட்டது என்று கருத இடமளிப்பதாகத் தோன்றுகிறது. சோழ நாட்டின் திருக்கழுமல வளநாட்டின் தலைநகராகப் பண்டைக் காலத்தில் விளங்கியது இவ்வூர்.
“பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக்
கண்டது நோனானாகித் திண்டேர்க்
கணையனகப் படக் கழுமலந் தந்த
பிணையலங்கண்ணிப் பெரும்பூட் சென்னி” (அகம் 44,11 14)