திருக்கழுக்குன்றம் என்று வழங்கப்படும் இவ்வூர் செங்கல் பட்டு மாவட்டத்தில் அமைகிறது. கழுகு காரணமாகப் பெற்ற பெயர். இரண்டு கழுகுகள் பூசித்துப் பேறு பெற்றமையின் கழுக் குன்றமாயிற்று என்பர். வேதமே மலையாக நின்றலின் வேதகிரி எனவும் அழைப்பர். மூவராலும் பாடல் பெற்ற ஊர் இது. மாணிக்கவாசகரும் தம் போற்றித் திருவகவலில் திருக்கழுக்குன்றிற் செல்வா போற்றி எனப் பாடுகின்றார். (191) கழுகு பற்றிய எண்ணத்தைத் திருப் புகழ் தருகிறது (கழுகு தொழு வேதகிரி – திருப் -325).