கள்ளில்

திருக்கள்ளம், திருக்கண்டலம் எனச் சுட்டப்படும் நிலையில் இன்று அமையும் இவ்வூர் செங்கற்பட்டு மாவட்டம் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.
முள்ளின் மேய முது கூகை முரலும் சோலை
வெள்ளின் மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளின் மேய அண்ணல்’
என இவர் தம் முதற்பாடலை அமைத்தாலும், (119-1) கடியார் பூம்பொழிற் சோலைக் கள்ளின் மேயான் (119-7) என்றும், கருநீல மலர் விம்மு கள்ளில் (119-7) என்றும் பாடும் தன்மையில், முதலில் காடு போன்ற இடம் பின்னர், இறைவன் திருக் கோயிற் சிறப்பால் மக்கள் வசிக்கத் தொடங்கிய நிலையில் செழிப்பு பெறத் தொடங்கியதோ என்ற எண்ணம் எழுகிறது. மேலும் கள்ளிச் செடிகளின் நிறைவால் பெற்ற பெயராக இது அமையலாம் என்ற எண்ணமும் அமைகிறது. கள்ளம், கண்டலம் கள்ளின் திரிபாக இருக்கலாம்.