கலிங்கம் தென்னிந்தியாலில் கிழக்குக் கடற்கரையை அடுத்திருந்த பண்டைய நாடுகளுள் ஒன்று. இது கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் கடலுக்கும் இடையே தெற்கில் கோதாவரி ஆறுமுதல் வடக்கில் ஒரிஸ்ஸா வரையில் பரவியிருந்தது. இது இக்கால ஒரிஸ்ஸாவும் கஞ்சமும் சேர்ந்த ஒரு நாடாகும். கஞ்சம் மாவட்டத்திலுள்ள முகலிங்கம் என்ற நகரம் இதன் தலை நகரம். நந்த அரசர் காலத்தில் கலிங்கம் மகத நரட்டோடு சேர்க்கப் பட்டிருந்தது. முதல் இராசேந்திர சோழர் கலிங்கத்தின் வழியாகக் கங்கை வரையில் படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டு கங்கை கொண்ட சோழர் என்ற பெயர் பெற்றார். கலிங்கத்தில் நடந்த போரில் குலோத்துங்கனின் படைத் தலைவன் தொண்டைமான் அடைந்த வெற்றியைக் கூறுவது கலிங்கத்துப் பரணி. கலிங்க நாட்டு மன்னன் யூகியுடன் போர் செய்த பொழுது யானைக் கொம்பால் அவன் மார்பைக் குத்தியதாகப் பெருங் கதை கூறுகிறது.
“வலிந்து மேற் சென்ற கலிங்கத்தரசன்.
குஞ்சர மருப்பிற் குறியிடப்பட்டு” (பெருங். 1:45:20 21)