கலய நல்லூர்

சாக்கோட்டை என்று சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சுந்தரர் பாடல் பெற்ற தலம் இது. அரிசிலாற்றின் தென் கரையில் உள்ள இவ்வூரின் இயற்கை வளம் சுந்தரர் பாடல்கள் மூலம் சிறப்பாகத் தெரிய வருகிறது.
அரும்பருகே சுரும்பருவ வறுபதம் பண்பாட
வணிமயில் கணடமாடு மணிபொழில் சூழயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கண் முகமலரும் கலய நல்லூர் காணே (சுந். 16-1)
கருமேதி புனன்மண்டக் கயன்மண்டக் கமலங்
களிவண்டின் கணமிரியும் கலய நல்லூர் காணே (சுந். 16-2)
கண்டவர் கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடும் கலய நல்லூர் காணே (சுந். 16-3)
இப்பாடல்கள் அனைத்திலும் கமலம் மிகச் செழித்து வளர்ந்த நிலையும், தாமரைப் பொய்கை மிகுந்த நிலையும் குறிப்பிடப் படுதல் நோக்கத் தக்கது. இன்று இவ்வூர் பற்றிப் பேசும்போது இங்குள்ள கோயில்கள் நான்கு பக்கங்களிலும் தாமரைப் பொய்கைகளால் சூழப்பட்டுள்ளது என்பது, தண்கமலப் பொய்கை புடை சூழ்ந்து அழகார் தலத்தில் என்னும் இத்தலத் துத் தேவாரப்பாடல் அடியால் விளங்குகின்றது. இக்காலம் கிழக் குப்பக்கத்துப் பொய்கை மக்களால் தூர்க்கப்பட்டுள்ளது. எண்ணத்தைக் காண்கின்றோம். எனவே இன்றுவரை தாமரைப் பொய்கைகள் நிரம்பிய இவ்வூரின் நிலை தெளிவுறுகிறது. இந் நிலையில் இடைக் காலத்துக்கு முன்பேயே இப்பொய்கைகளின் பெருக்கு எண்ணற்குரியது. எனவே இதன் காரணமாக, கமல என்ற நல்லூர் என்ற பெயரை இதற்கு மக்கள் அளித்திருக்கலாம். பின்னர் அப்பெயர் கலய நல்லூர் எனத் திரிந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இடைக்காலத்திலேயே இத்திரிபினை நோக்க, இவ்வூர் பழைமைப் பொருந்தியதாகவும் இருந்திருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. உயிர்களை அடைத்த கும்பத்தின் கலயம் பிரளய வெள்ளத்தில் தங்கிய இடமாதலின் கலய நல்லூர் எனப் பெயர் எய்திற்று என்ற கருத்து புராணக் கருத்தாக அமைகிறது.