இன்று உய்யக் கொண்டான் மலை என்ற பெயரில் அமையும் இத்தலம் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. கோயில் மலையின் மீது உள்ளது. மூவர் பாடலும் பெற்ற தலம் இது. மலைத்தலம் என்பதனை ஞானசம்பந்தர் பாடல் விளக்கங்கள் காட்டுகின்றன.
போர கலந் தரு வேடர் புனத்திடையிட்ட விறகில்
காரகிலின் புகை விம்முங் கற்குடி மாமலை யாரே (43-3)
வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயிலாடும் கற்குடி மாமலையாரே (43-9)
கற்குடி என்ற ஊர்ப்பெயர் மட்டுமே திருநாவுக்கரசர் பாடலில் அமைகிறது. (285-3) சுந்தரர், பூம்பொழில்கள் (27-1) சோலைகள் (27-2) கரும்பாரும் வயல்கள் (29-9) போன்றவை சூழ்ந்து காணப் படும் இவ்வூர் வளத்தினைச் சிறப்பிக்கின்றார். இந்நிலையில் மலைப்பகுதியைச் சார்ந்த ஊர் காரணமாகக் கற்குடி என்ற பெயர் அமைந்து இருக்கும் எனத் தோன்றுகிறது. பின்னர் இறை வன் சிறப்பு காரணமாக உய்யக் கொண்டான் மலை என்று வழங்கத் தொடங்கிற்று எனக் கருதலாம். கல்வெட்டு இரண்டு பெயரையும் சுட்டுகிறது.