இன்று, மேலைக் காழி என்றும் தலைஞாயிறு என்றும் அழைக்கப்படும் இந்த ஊர் தஞ்சையில் உள்ளது. ஞான சம்பந்தராலும், (167) சுந்தரராலும் பாடல் பெற்ற தலம் இது. கருப்பறியலூர்க் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட. மயிலாடும் கொகுடிக் கோயில் என சுந்தரர் பாடும் பாடல் (30-1) கருப்பறியலூர் ஊர்ப்பெயர் என்பதையும் கொகுடிக் கோயில் என்பது சிவன் கோயிலைக் குறித்தது என்பதையும் தெளிவாகத் தருகிறது. மேலும் இவர்,
விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி
வினை போக வேலி தோறும்
கருந்தாள வாழை மேற் செங்கனிக
டேன் சொரியும் கருப்பறியலூர் (30-4)
என்றும் பாடிச் செல்லும் தன்மையில் இவ்வூர்ச் செழிப்பு தெரிகிறது. எனவே இப்பெயரும் கரும்பு அடிப்படையில் கரும்பு அரியும் இயல்புடைய ஊர் என்ற நிலையில் கரும்பின் மிகதி பற்றி வந்ததோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சீர்காழிக்கு மேற்குத் திசையில் உள்ள நிலையில் இது சிவன் கோயில் சிறப்பு காரணமாக மேலைக் காழி எனப் பெயர் பெற்றிருக்க லாம்.