யாவை என்ற வினாப்பெயர் இறுதி ஐகாரம் வகரத்தொடும் கெட வற்றுச்
சாரியை பெற்று யாவற்றை – யாவற்றொடு – என முடிவது போல, ஐகார ஈற்றுப்
பண்புகொள் பெயர்களாகிய கரியவை – நெடியவை – குறியவை – முதலியனவும் ஈறு
மெய் யொடும் கெட, வற்றுச்சாரியை இடையே பெற்றுக் கரிய வற்றை –
நெடியவற்றை – குறியவற்றை – என்றாற் போல உருபொடு புணரும். இவை கருமை –
நெடுமை – குறுமை – முதலிய பண்புப் பெயரன்றிக் கரியவை – நெடியவை –
குறியவை – முதலான பண்பு கொள் பெயராக நின்று ‘வை’ கெட்டு ‘வற்றுப்’
பெற்றுப் புணர்ந்தன. (தொ.எ. 178 நச். உரை)