இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டார் கோயில், ஆண்டாங் கோயில் என்று அழைக்கப்படுகின்றது இவ்வூர். திருநாவுக்கரசர் இத்தலத்து இறை பற்றிப் பாடிய ஒரு பதிகம் தேவாரத்துக்கு அமைகிறது. இப்பெயர்க் காரணத்தை ஓரளவு ஊகிக்கும் தன்மையில் இப்பாடல்கள் அமைகின்றன.
ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள் அமர்
கருத்தனைக் கடுவாய்ப் புனலாடிய
திருத்தனைப் புத்தூரச் சென்று கண்டுய்ந்தேனே 176-1
வெண்குழைக் காதனைக்
கடுவாய்க் கரைத் தென்புத்தூர் – 176-4.
என்னும் இரு நிலையில் இவ்வூர் விளக்கம் அமைகிறது. கடுவாய்க்கரை – கடுவாய்ப்புனல் என்ற குறிப்புகள் ஆற்றைக் குறிக்க, புத்தூர் ஊர்ப்பெயர் என்பதையும் ஆற்றின் தென் கரையில் இவ்வூர் அமைந்திருந்தது என்பதையும் இப்பாடலில் உணர இயலுகிறது. எனவே புத்தூர் என்ற ஊர்ப்பெயர் முதலில் அமைந்து அதனைப் பிற புத்தூர்களினின்றும் தனிப்படுத்தக் கடுவாய்க் கரைப்புத்தூர் எனச் சுட்டியிருக்கலாம் அல்லது கடுவாய்க் கரையில் சிவன் கோயில் காரணமாகப் புதிதாகத் தோன்றிய ஊர் எனவும் இதனைக் காணலாம். கடுவாய் என்பது குடமுருட்டி ஆறு. இதன் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது என அறியும்போது ஆற்றுப் பெயரும் இன்று மாறியிருக்கக் காண்கின்றோம். மேலும் ஆண்டார் கோயில் என்ற இவ்வூர் பெயர் மாற்றத்தைக் காண, கோயிலின் சிறப்பு செல்வாக்குக் காரணமாக ஊர்ப்பெயரும் மாறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.