கடிக்குளம்

இன்று கற்பகனார் கோயில் என்றும் கற்பகனார் குலம் என்றும் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து மைகிறது. இன்றைய இப்பெயர் சிவனின் பெயரான கற்பகேஸ்வரர் என்பதன் செல்வாக்குக் காரணமாக ஏற்பட்டது என்பது தெளிவான ஒன்று. கடிக்குளம் என்பது மணம் கொண்ட குளம் காரணமாக எழுந்தது என்பது சம்பந்தர் பாடல் வழிப் புலனாகின்றது
பொடி கொள் மேனி வெண்ணூலினர்
தோலினர் புலியுரி அதளாடை
கொடி கொள் ஏற்றினர் மணிகிணின் என வரு
கடிகொள் பூம்பொழில் சூழ் தரு கடிக்குளத்
துறையும் கற்பகத்தைத் தம்
முடிகள் சாய்த்தடி வீழ் தரும் அடியரை
முன் வினை மூடாவே’
என்ற பாடலில் கடிகொள் பூம்பொழில் சூழ் கடிக்குளம் எனச் சுட்டுகின்றார் சம்பந்தர் (240-1). எனவே குளத்தைச் சுற்றி யிருந்த பொழில்களில் உள்ள மண மிகு மலர்கள் வீழ்ந்து மணம் வீசிக் கொண்டு இருக்கும் குளக்கரையில் இருந்த ஊர் காரணமாகக் கடிக்குளம் என்ற பெயர் அமைந்தது எனத் தெளிவாகக் கூறலாம். மேலும் இன்று கற்பகனார் கோயில் என்று சுட்டினா லும், குளம் என்றும் சுட்டும் நிலை இக்குளத்தின் பெருமையைச் சுட்டும் தன்மையில் அமைகிறது. மேலும் இங்குள்ள கோயில் தீர்த்தத்தின் பெயரும் கடிக்குளம் என்றே சுட்டப்படக் காண்கின்றோம்..