கடிகை

வைணவர் போற்றும் திருமால் கோயில் தலம். சோளங்கிபுரம் எனச் சுட்டப்படுகிறது.
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே (1731)
என, கடிகைத் தடங்குன்று பற்றியும் சுட்டுகின்றார் திருமங்கை யாழ்வார். எனவே மலைத் தலம் இது என்பது தெளிவு
வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் றன் விண்ணகர் (3444)
என்பது பேயாழ்வார் பாடல், கோயில் இன்றும் 400 அடி உயரமுள்ள மலை மேல் இருக்கிறது என்பது மங்கையாழ்வார் கடிகைத் தடங்குன்று என்று சுட்டுவதற்குப் பொருத்தமாக அமைகிறது. மேலும், கடிகை கலா சாலையைக் குறிப்பதும், இங்கு இன்றும் ஒரு வடமொழிக் கல்லூரி இருப்பதும் ஊர்ப்பெயர்க் காரணத்தைச் சுட்டவல்லது. சோழஸிம்ஹபுரம் சோழபுரம் என மருவிற்று எனவும் காண் கின்ற பொழுது, கடிகை என்பது கலாசாலைக்குப் பின்னர் செல்வாக்குப் பெற்று திகழ்ந்திருக்க வேண்டும் எனக் கூறல் பொருத்தமாகும்.