திருக்கடவூர் திருமெய்ஞ்ஞானம் என்று இன்று இரண்டு பெயரிலும் சுட்டப்படும் இவ்வூர் மூவர் பாடலும் பெற்றதாக அமைகிறது. இவ்விலக்கியக் குறிப்புகள் கடவூர் வீராட்டானத்தையும், கடவூர் மயானத்தையும் தெரிவிக்கின்றன. எனவே கடவூரில் அமைந்திருந்த இரண்டு கோயில்கள் இவை எனத் தெரிகின்றன. இன்று கடவூர் வீரட்டம் என்பது கடவூர் என்று நின்க, கடவூர் மயானம் என்பது மெய்ஞ்ஞானம் என்று சுட்டப்படும் தன்மையைக் காண்கின்றோம். இரண்டும் 13 கிலோமீட்டர் தொலைவி லேயே இருப்பதால் இரண்டும் முதலில் ஒரே ஊராகத்தான் இருந்திருக்க வேண்டும் ; அதற்காகத்தான் வீரட்டானம், மயானம் என்று தனித்து குறிப்பிட்டிருக்கின்றனர் எண்ணம் என்ற வெளிப்படையானது. மேலும் மயானம் என்ற சொல்லை நோக்க அன்றும் மக்கள் இதனுள் வசித்திருக்க மாட்டார்களோ கோயில் மட்டுமே இங்கு அமைந்திருக்கக் கூடுமோ என்று எண்ணத்தோன்றுகிறது. மேலும் சுந்தரர் பாடலைக் கொண்டு நோக்கவும் இவ்வெண்ணம் உறுதிப்படுகிறது.
பாயும் விடையொன்றது வேறிப் பலி தேர்ந்துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழு மயானத்துப் பெரிய பெருமான் (53-3)
என, பேய்கள் வாழும் மயானம் என்று கூறிய இவர் மேலும்,
பறையார் முழவம் பாட்டொடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் (52-4)
என. கடவூரில் தான் மக்கள் தொண்டர் இருந்தமையினைக் குறிப்பிடுகின்றாரே தவிர, மயானத்தில் இல்லை. மேலும், இன்று இவ்வூர் பற்றி குறிப்பிடும்போது, “ திருக்கடவூர் கோயிலுக்குச் கிழக்கில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. மணற்பாதை. கோயில் மட்டுமே உள்ளது.ஊர் எதுவும் இல்லை என்று சுட்டும் தன்மை யும் அன்று முதல் இன்று வரை தென் நிலை காட்டும். மயானம் என்ற பெயரே இன்று மெய்ஞ்ஞானம் என்று திரிந்து வழங்குகிறது எனக் கூறலாம். காராரும் பொழிற் சூழ் கடவூர் வீரட்டம் அங்குள்ள கோயில் குறிக்கும் தன்மையில் அமைகிறது. கடவூர் வீரட்டானம் என்றும் அதனைச் சுட்டினர். இதனை, களியினார் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டமென்னும் தளியினார் எனச் சுட்டுகின்றார் திருநாவுக்கரசர் (54-5). மேலும் மாணிக்க வாசகர். பட்டினத்துப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பி போன்றோரும் தலத்து இறைவனைப் பரவுகின்றனர். இவ்வூர்ப் பெயரும் கடப்ப மரம் காரணமாகப் பெயர் பெற்று கடவூர் என்றாகியிருக்கலாம்.