கடம்பூர்

இன்று மேலைக் கடம்பூர் எனச் சுட்டப்படுகின்ற இத் தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. இத்தலமும் கடப்ப மரங்கள் நிறைந்த தன்மையால் பெயர் பெற்றிருக்கலாம் என்பது இவ்வூர்ப் பெயரைப் பார்க்கத் தோன்றுகிறது. கடம்பு + ஊர் – கடம்பூர். கடம்பூரில் உள்ள கோயில் கரக் கோயில் என்று சுட்டப்படுகிறது. கடம்பூர் கரக் கோயில் ( சுந் – தே 2-5 ). கரக் கோயில் என்பதற்குப்பல காரணம் கூறினாலும் . சக்கரக் கோயில் என்ற கி,நாச்சிமுத்து அவர்களின் கருத்தே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. ஏனெனில் கோயில் கர்ப்ப இல்லின் அடிப்பாகம் இரத வடிவில் குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. எண்ணத்தைக் காணும்போது இரதத்தின் மேல் கோயில் அமைந்த காரணம் கருதி, சக்கரக் கோயில் எனப்பட்டு. கரக் கோயில் என நின்றிருக்கலாம். மேலும் இரதக் கோயில் என்பது கரக் கோயிலாகத் திரிந்திருக்குமோ என்பதும் ஆய்வுக்குரியது. எனவே இதுவும் காவிரிக் கரையில் உள்ள தொரு ஊர். கடப்ப மரங்கள் நிறைந்த பிற ஊர்ப் பெயரினின்றும் இதனைப் பிரித்துணர்த்த இதனைக் கடம்பூர் என்றும், முன் குறிப்பிட்டதனைக் கடம்பந்துறை எனவும் பெயர் சுட்டி வழங்கினரோ எனவும் எண்ணக் கூடுகிறது.
திரைக்கும் தண்புனல் சூழ் கரக்கோயில் என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் (134-11). கடம்பூர் கரக்கோயில் பற்றிய எண்ணம் சுந்தரரிடமும் அமைகிறது (2-3). கடம்பூர் மேவிய விடங்கா போற்றி எனப் பாடுகின்றார் மாணிக்கவாசகர் ( போற்றித் – 160).