திருக்கச்சூர் என்று இன்று சுட்டப்படும் இத்தலம் செங்கற் பட்டு மாவட்டத்தில் அமைகிறது. சுந்தரர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாராலும் சுட்டப்படுகிறது ( ஏயர் 174, 177). கச்சூரில் உள்ள கோயில் ஆலக் கோயில் எனச் சுட்டப்படுகிறது. மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேனடியேன் வயல் சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயிலம்மானே எனப் பாடுகின்றார் சுந்தரர் ( 41-5 ) * திருமால் அமுதம் வேண்டி ஆமையாயிருந்து பூசித்த காரணத்தாலும் ஆலமரம் இத் தலத்துக்குரிய விருட்சமாக இருத்தலாலும் இப்பெயர் பெற்றது. ( கச்சபம் – ஆமை ) கச்சப ஊர் கச்சூர் என்றாயது போலும் என்பர் திரு. சதாசிவச் செட்டியாரவர்கள் இதனை நோக்க முதலில், ஆலமரங்களின் மிகுதி காரணமாகக் கோயில் ஆலக் கோயில் என்ற பெயர் பெற்று, பின்னர் இறை செல்வாக்கு பெற்று. புராணக்கதை காரணமாக, கச்சப ஊர் என வழங்கப்பட்டு, பின்னர் கச்சூர் என்று வழக்கில் அமைந்தது போல் தோன்றுகிறது.