இது தமிழ் நெடுங்கணக்கில் பதினொன்றாம் உயிர்; அங்காத்தலோடு இதழ்
குவித்து எழுப்பும் உயிரொலிகளுள் ஒன்று; பெயராகவும் வினையாகவும் வரும்
ஓரெழுத்தொரு மொழியாம் நெடில். ஓகார இடைச்சொல் பிரிநிலை, வினா,
எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு – முதலிய பல பொருளில்
வரும்.
ஓஒ பெரியன் – என உயர்வுசிறப்புப் பற்றியும், ஓ ஒ கொடியன்- என
இழிவுசிறப்புப் பற்றியும், ஓஒ தமக்கோர் உறுதி உணராரே எனக் கழிவிரக்கப்
பொருள் பற்றியும், ஓ பெரிதுவப்பக் கேட்டேன்- என மகிழ்ச்சிக்குறிப்புப்
பற்றியும், ஓஒ கொடிது கொடிது – என வியப்புக் குறிப்புப் பற்றியும், ஓ
தெரிந்தது – என ஞாபகக்குறிப்புப் பற்றியும், ஓ மகனே – என
விளிக்குறிப்புப் பற்றியும் – ஓகாரம் அளபெடுத்தும் அளபெடாதும்
முதற்கண் வரும்.