ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள – என்ற நெட்டெழுத்துக்கள் ஏழும் எழுத்தாம்
தன்மையன்றிச் சொல்லாம் தன்மையும் பெறும் ஆற்றல ஆதலின், ஓரெழுத்தொரு
மொழிகளாம்.
ஆ – பசு; ஈ – கொடு; ஊ- இறைச்சி; ஏ- அம்பு; ஓ – மதகுநீர் தாங்கும்
பலகை; ஐ – வியப்பு; ஒள- அவை (ஒளகாரம் உயிர் மெய்க்கணல்லது வாராது
என்பதே நச். கருத்து)
இனி, குற்றெழுத்துக்களுள் அ இ உ – சுட்டிடைச் சொற் களாகவும், எகரம்
வினாஇடைச்சொல்லாகவும், ஒகரம் ஒப்பிடுதலைக் குறிக்கும் பகுதியாகவும்
வரினும் இவை இடைச்சொற்களாதலின், பெயர் வினைகளாக வரும்
நெட்டெழுத்துக்களை ஒத்த சிறப்பில. (தொ.எ. 43, 44 நச்.)
உயிர் நெட்டெழுத்துக்களிலும் ஒளகாரத்தை விலக்கி ஏனைய ஆறனையும்
கொள்வதே தொல்காப்பியனார் கருத்தாம். அவர் ஒளகாரத்தை ‘ஈரளபு இசைக்கும்
இறுதியில் உயிர்’ என்பர். (தொ.சொ. 281 சேனா.)
உயிர் வருக்கத்தில் ஆறு, மகர வருக்கத்தில் ஆறு, த ப ந –
வருக்கங்களில் ஐவைந்து, க வ ச வருக்கங்களில் நந்நான்கு, யகர
வருக்கத்தில் ஒன்று – ஆகிய நெடில்கள் 40, நொ து – என்னும் குறில்கள்
இரண்டு – ஆக நாற்பத்திரண்டும் ஓரெழுத்தொரு மொழிகளாம். இவை
சிறப்புடையன. சிறப்பில்லாதன பிறவுமுள.
வருமாறு : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ; மா மீ மூ மே மை மோ; தா தீ தூ தே தை; பா
பூ பே பை போ; நா நீ நே நை நோ; கா கூ கை கோ; வா வீ வை வெள; சா சீ சே
சோ;யா; நொ து – என்பன.
உயிர்க்குற்றெழுத்துக்கள் ஐந்தும், குவ்வும், கௌ வெள பீ சை என்னும்
உயிர்மெய்நெட்டெழுத்துக்களும் சிறப்பில.
(நன். 129 இராமா.)
இவற்றின் பொருள்:
ஆ – பசு; ஊ- இறைச்சி; ஏ-அம்பு; ஐ- வியப்பு; ஓ- மதகுநீர் தாங்கும்
பலகை; மீ, மே – மேல்; மூ- மூத்தல் என்பதன் பகுதி; மோ – மோத்தல்
என்பதன் பகுதி; தூ – பற்றுக்கோடு; தே- தெய்வம், பா- பாட்டு; பே- நுரை;
நே – அன்பு; நை- வருந்து; நோ- நோய்; கூ-பூமி; கோ- அரசு; வீ- மலர்; வை-
கூர்மை; வெள- கைக்கொள்; சீ- நீக்கு; சே-எருது; சோ- அரண்; யா- யாவை;
நொ-துன்பப்படு; து-உண். இவையாவும் தமக்குத் தாமே முதலும் இறுதியும்
ஆவன. (நன். சங். 129)
தொல்காப்பியனார் உயிர்மெய்யை விடுத்து நெடில் ஏழுமே
ஓரெழுத்தொருமொழிகள் என்றும், குற்றெழுத்து ஐந்தும் மொழியாக நிறைந்து
நில்லா என்றும் கூறினார். எனவே, குற்றெழுத்துக்களுள் அ இ உ –
சுட்டாகவும் எ வினாவாகவும் வரும் என்ற கருத்துப்படவும் உயிர்
வருக்கத்திற்கே ஓரெழுத் தொருமொழி கூறியுள்ளார். ( தொ. எ. 43, 44
நச்.)
இனி, சிறப்பில்லனவும் ஓரெழுத்தொருமொழியுள் சில உளவாயின. அவை ஆறாம்
உயிரும், பகர ஈகாரமும், சி சூ சை கௌ வெள- என்பன போல்வனவும் கொள்க.
(நன். 128 மயிலை.)
வகரஈற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையான் உணர்த்தி நிற்றலான்
ஒள என்னும் ஓரெழுத்தொரு மொழியும், சுட்டு – வினா- உவமைப் பொருளைத்
தரும் இடைச்சொல் – ஆதலான் குற்றுயிர் ஐந்தான் ஆகிய ஓரெழுத்தொருமொழி
களும், கௌ- என்னும் உயிர்மெய்யானாய ஓரெழுத்தொரு மொழியும், இவைபோல்வன
பிறவும் சிறப்பில்லன எனக் கொள்க. (நன். 129 சங்கர.)