இது தமிழ் நெடுங்கணக்கில் உயிரெழுத்துக்களில் பத்தாவது;
அங்காத்தலோடு இதழ் குவிதலான்பிறக்கும் உயிரெழுத்துக் களுள் ஒன்று;
தமிழ்ச் சிறப்பெழுத்து ஐந்தனுள் ஒன்று; ஓகார நெடிலுக்கு இனமான குறில்;
ஓகாரம் அளபெடுக்கு மிடத்து அதனை அடுத்து வருவது; நகரஒற்று ஒன்றுடனேயே
கூடி (நொ – என) மொழியிறுதியில் வருவது; முன்னிலை ஏவ லொருமை வினையாகிய
ஓ என்பது அளபெடுக்குமிடத்தும், சிறப்புப் பொருளில் வரும் ஓகாரம்
அளபெடுக்குமிடத்தும், மொழியிறுதியில் ஒகரம் அளபெடை யெழுத்தாக
நிகழும்.