இது நெடுங்கணக்கின்உயிர்வரிசையில் பன்னிரண்டாவ தாகிய இறுதி
யெழுத்தாம். இஃது அங்காத்தலோடு இதழ் குவிதலால் பிறக்கும்
ஐந்தெழுத்துக்களுள் ஒன்று. இஃது அளபெடுப்புழி உகரம் இசைநிறைக்க வரும்.
இஃது அள பெடுக்குங் காலத்தும் அளபெடை இன்றி வருங்காலத்தும் பொருள்
வேறுபடுதலுண்டு எனத் தொல்காப்பியம் கூறும். ‘அஉ’ என்பது ஒளகாரத்தின்
போலிவடிவாம்; ‘அவ்’ என்பதும் அது. ஒளகாரம் மொழி முதற்கண் குறுகும்
என்பர் சிலர். ‘அஉவ்’ என்பவற்றின் கூட்டம் ஒளகாரம் என்பர் சிவஞான
முனிவர் (சூ. வி. பக். 25). உயிரெழுத்துக்களுள் தனித்து இறுதியில்
வாரா எழுத்து இஃது.