ஒளகாரஈற்றுப் புணர்ச்சி

ஒளகாரஈற்றுப் பெயர் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும், வருமொழி
வன்கணம் வரின் உகரப்பேறும் வல் லெழுத்தும், மென்கணம் இடைக்கணம்
வரினும் உகரப் பேறும்எய்திப் புணரும். சிறுபான்மை உருபு புணர்ச்சிக்கு
வகுத்த இன்சாரியை பெற்றும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி நிகழும்.
எ-டு : கௌவுக் கடிது, கௌவுச் சிறிது, கௌவுத் தீது, கௌவுப்
பெரிது; கௌவு ஞான்றது, நீண்டது, மாண்டது; கௌவு யாது, வலிது, – என அல்
வழிக்கண்ணும்; கௌவுக்கடுமை, கௌவுச்சிறுமை, கௌவுத்தீமை, கௌவுப்பெருமை;
கௌவுஞாற்சி, நீட்சி, மாட்சி; கௌவுயாப்பு, வலிமை; – என
வேற்றுமைக்கண்ணும் உகரம் பெற்றும், வன்கணம் வரின் வல்லெழுத்தும்
உடன்பெற்றும் புணர்ந்த வாறு. (உயிர்க்கணம் வரின் உகரம் பெறாது உடம்படு
மெய் பெற்றே முடிதல் கௌவழகிது, கௌவழகு – என இருவழியும் கொள்க.)
இனி, வேற்றுமைப் பொருட்புணர்ச்சி இன்சாரியை பெற்று, கௌவின் கடுமை,
கௌவின் ஞாற்சி, கௌவின் வலிமை, கௌவினருமை- என முடிந்தவாறும் காண்க.
(தொ. எ. 295 நச்.)