நிலைமொழிகளை அடுத்து வல்லெழுத்தை முதலாவதாகக் கொண்ட கு – கண் –
என்ற வேற்றுமையுருபுகள் புணரின், பொருந்துமிடத்து வல்லொற்றாயினும்
மெல்லொற்றாயினும் மிகும். சிறுபான்மை இயல்பாதலும், சிறுபான்மை நிலை
மொழி ஈறுதிரிதலும் உள.
எ-டு: மணிக்கு, மணிக்கண்; ஈக்கு, ஈக்கண்; தினைக்கு, தினைக்கண்;
வேய்க்கு, வேய்க்கண்; வேர்க்கு, வேர்க் கண்; வீழ்க்கு, வீழ்க்கண் –
இவை வல்லொற்றுமிக்கன. வல்லொற்று மிகும் நிலைமொழி ஈறுகள் இ, ஈ, ஐ, ய்,
ர், ழ் – என்ற ஆறாகும்.
தாம், நாம் – என்பன கண்ணுருபு வருமிடத்து, நெடுமுதல் குறுகி மகரம்
கெட்டு ஙகர மெல்லொற்று மிகுவனவாம்.
தங்கண், நங்கண் – என வரும்.
உயர்திணைப்பெயர் விரவுப்பெயர்களின் முன் கண்உருபு இயல்பாகப்
புணரும்.
எ-டு : நம்பிகண், நங்கைகண், அரசர்கண்;
தம்பிகண், தந்தைகண், தாய்கண் – என வரும்.
உயர்திணைப்பெயர் விரவுப்பெயர்களின் முன் குவ்வுருபு மிக்குப்
புணரும்.
எ-டு : நம்பிக்கு, நங்கைக்கு, அரசர்க்கு;
தம்பிக்கு, தந்தைக்கு, தாய்க்கு – என வரும்.
இங்ஙனம் கண்உருபு வருவழி இயல்பாகும் நிலைமொழி ஈறுகள் இ, ஐ, ய், ர்
– என்பன.
வேற்கு, வேற்கண்; வாட்கு, வாட்கண் – என லகர ளகர ஈறுகள்திரிந்தன.
(தொ. எ. 144 நச். உரை)