ஒல்லை என்ற சொல் பழமை என்ற பொருளையுணர்த்தும். ஊரின் பழமை குறித்து ஒல்லையூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒலிமங்கலம் என்று அழைக்கப்படும் ஊரே ஒல்லையூர். ஒலியமங்கலம் என்ற ஊரே இது என்று தெரிகறது. திருமெய்யத்துக்குப் பக்கத்தில் இப்பெயரோடு ஓரூர் உள்ளது.
“மன்பதைக்காக்கும் நீள் குடிச்சிறந்த
தென்புலங்காவலின் ஓரிஇப்பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கும்” (புறம்.71)
என்ற பாடலடிகள் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தென் புலங்காவல் புரிந்த மன்னன், பாண்டிய நாட்டவன் என்பதனை உணர்த்தும். எனவே ஒல்லையூர் பாண்டி நாட்டுப் பகுதி என்பதனையும் குறிக்கிறது. ஒல்லையூர் நாடும் இருந்திருக்கிறது. பாண்டி நாட்டின் வட வெல்லையில் ஒல்லையூர் நாடு ஒரு சிறு பகுதி. இச்சிறு பகுதியைச் சோழர் பறித்துக் கொண்டனர். பாண்டிய மன்னர்களால் ஒல்லையூரை மீட்க முடியவில்லை பலமுறை சோழர் மேல் படை கொண்டு தாக்கினர். வெற்றி கிட்டவில்லை, பூதப்பாண்டியன் பட்டம் பெற்று நாட்டை ஆளத் தொடங்கியதும் முன்னோரைத் தொடர்ந்து ஒல்லையூரை மீட்கப் போரிட்டான்; வென்றான். ஆகவே ஒல்லையூர் தந்த (வென்ற) பூதப்பாண்டியன் ஆனான் . பூதப்பாண்டி என்ற ஊர் பூதப் பாண்டியன் என்னும் மன்னன் பெயரால் வழங்குகிறது. மன்னன் பெயரால் ஊர் பெயர் பெறும் வழக்கிற்கு இது ஒரு சான்று. இவ்வூர் நாஞ்சில் நாட்டுத் தென் திரு விதாங்கூர் பகுதியிலுள்ளது. ஒல்லையூர் இழான் மகன் பெருஞ்சாத்தான் என்னும் வள்ளல் இவ்வூரைச் சேர்ந்தவன். அகநானூற்றில் 25 ஆம்பாடலும், புறநானூற்றில் 71 ஆம் பரடலும் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் இயற்றியவை. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் ஈரத்தனார் புற நானூற்றில் 242ஆம் பாடலால் பாடியுள்ளார்.
“ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல் வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
மூல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே” (புறம் 242 2 4 6)