ஒற்றளபெடை

ங்ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஃ – என்னும் பதினொரு புள்ளியும்
குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுக்கும், என்னை?
‘வன்மையொடு ரஃகான் ழஃகான் ஒழித்தாங்கு
அல்மெய் ஆய்தமோடு அளபெழும் ஒரோவழி’
என்ப வாகலின்.
வரலாறு : மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு,
மின்ன்னு, தெவ்வ்வர், மெய்ய்யர், வெல்ல்க, கொள்ள்க, எஃஃகு – இவை
குறிற்கீழ் அள பெழுந்தன.
அரங்ங்கம், முரஞ்ஞ்சு, முரண்ண்டு, மருந்ந்து, அரும்ம்பு,
முரன்ன்று, குரவ்வ்வை, அரய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு –
இவை குறிலிணைக்கீழ் அளபெழுந்தன. (நேமி. எழுத். 3 உரை)
செய்யுட்கண் ஓசையை நிறைப்பதற்கு ங ஞ ண ந ம ன வ ய ல ள – என்ற பத்து
மெய்யெழுத்துக்களும் ஆய்தமும், குறில்கீழும் குறிலிணைக்கீழும், மொழி
யிடையினும் இறுதியிலும் தம் மாத்திரையின் மிக்கு ஒருமாத்திரையாக
ஒலிப்பது ஒற்றள பெடையாம். அவ் வொற்று அளபெடுத்தமை தோன்ற அதுவே அடுத்து
வரிவடிவில் அறிகுறியாக எழுதப்படும்.
எ-டு :
‘நங்ங் களங்கறுப்பாம் நாம்’
‘இலங்ங்கு வெண்பிறைசூ டீசன் அடியார்க்கு’
‘வெஃஃகு வார்க்கில்லை வீடு’
‘இலஃஃகு முத்தின் இனம்’
பதினொரு புள்ளியெழுத்துக்களும் குறில்கீழும் குறிலிணக் கீழும்
சொல்லின் இடையும் இறுதியுமாகிய நான்கிடத்தும் அளபெடுப்பவே, வரும்
ஒற்றளபெடை 44 ஆகும். ஆய்தம் மொழியிடைக் கணன்றி வாராமையின், இறுதிக்கண்
இரண்டு நிலைகளையும் அதற்கு நீக்க ஒற்றளபெடை 42ஆம். (நன். 92)