ஒருபோகு

ஒத்தாழிசைக் கலியின் இரண்டு பெரிய பிரிவுகளாகிய அகநிலை ஒத்தாழிசை -தேவபாணி – என்ற இரண்டனுள், தேவபாணியின் இரு பிரிவுகளுள் (அவை வண்ணகஒத் தாழிசையும், ஒருபோகும் ஆம்) ஒன்று.ஒன்றாகிய போக்கினையுடையது எனப் பண்புத்தொகை அன்மொழித்தொகையாயிற்று.நடுவே வரப்பு முதலிய தடங்கல் இல்லாத நிலத்தினை ஒருபோகு என்பது போல,நடுவே வண்ணக ஒத்தாழிசை போலத் தரவு தாழிசை பேரெண் அளவெண் சிற்றெண்சுரிதகம் எனப் பல உறுப்பு வேறுபாடுகளால் ஓசை வேறுபாடுகள் உறாமல்,பெரும்பா லும் எடுத்தல் படுத்தல் நலிதல் அற்ற ஒரேவகை ஓசையொடு வருதலின்‘ஒரு போகு’ எனப்பட்டது.ஒன்றாகிய போக்கினை உடைத்து என்பதற்கு ஓர் உறுப்பு நீங்கியது என்றுபொருள் செய்தலும் உண்டு. கொச்சக ஒருபோகு என்பது கொச்சகம் என்ற உறுப்புநீங்கியது; வண்ணக ஒருபோகு என்பது எண் உறுப்பு நீங்கியது. வண்ணகஒத்தாழிசைக்கு ஓதிய உறுப்புக்களுள் யாதாயினும் ஒன்று இல்லாமல் வருவதுஒருபோகு ஆயிற்று.திரிகோட்ட வேணி என்பது கொம்புபோல முறுக்கிய மயிர் முடியைக்குறியாது அதனையுடையவளைக் குறிப்பது போல, ஒரு போகு என்பது போகிய ஓர்உறுப்பினைக் குறியாது அதனையுடைய பாவினைக் குறித்தது.ஆதலின் ஓர் உறுப்பினை இழந்து வரும் தேவபாணியின் பகுதி ஒருபோகுஆகும். இஃது இழக்கப்பட்ட உறுப்பின் பெயரால் கொச்சக ஒரு போகு,அம்போதரங்க ஒரு போகு என இரு வகைப்படும். (தொ. செய். 147 நச்.)