ஒருபஃது முதலியவை உருபேற்கும்போது அடையும் திரிபுகள்

ஒருபஃது முதலியன உருபேற்குமிடத்து இடையே ஆன் சாரியை வர, பஃது
என்பதன் பகர ஒற்று நீங்கலாக ‘அஃது’ என்பது கெட, ஆன்சாரியை பெற்று,
ஒருபானை, இருபானை, முப்பானை, நாற்பானை, ஐம்பானை, அறுபானை, எழு பானை,
எண்பானை – என முடியும். (தொ.எ.199 நச்.)
பொதுவிதியான் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும் மரபை ஒட்டி, ஒருபஃது +
அன் + ஐ = ஒருபஃதனை…… எண்பஃதனை என முடிதலுமுண்டு. ( 199 நச்.
உரை)
ஒன்பஃது என்பதும் பஃது என முடியும் சொல்லாதலின், அதுவும் ஒன்பானை,
ஒன்பஃதனை – என்று உருபேற்கும் முடிவு கொள்ளும். ( 199 நச். உரை)