உறுபுலி துப்பின் ஓவியர் பெருமகன்! (பத்துப். சிறுபாண் 122) என்று நல்லியக் கோடன் என்ற வள்ளல் கூறப் பெற்றுள்ளான். ஓவியர் குடியிற் பிறந்த பெருமகன் ஆகிய ஓவியர் பெருமகன் என்ற பெயர் “ஒய்மான்” என மருவி, அவன் ஆண்ட நாடு ஒய்மாநாடு எனப் பெயர் பெற்றது போலும், ஒய்மாநாடு திண்டிவனத்திற்கு வடக்கிலுள்ள மா விலங்கையை வட வெல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும், சூணாம்பேடு என்னும் ஊரையடுத்த வில்லிப் பாக்கத்தைக் கிழக்கு எல்லையாகவும் கொண்டது. மேற்கில் ஏறத்தாழ விழுப்புரம் வரையில் பரவியிருந்ததாகவும் தெரிகிறது. இந்நான்கு எல்லைகளுக்குள்ளேயே எயிற்பட்டினம் இருந்தது. இந்நாட்டைச் சேர்ந்தனவாக இலக்கியங்கள் கூறும் வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இன்னும் இருக்கின்றன. “புறநானூற்றில் 176 ஆம் பாடலால் புறத்திணை நன்னாகனார் ஒய்மான் நல்லியக் கோடனைப் பாடியுள்ளார்.
“உறுபுலிதுப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடிக்கணம் சிதறும் பெயல் மழமைத்தடக்கை
பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை
நல்லியக் கோடனை…… ” (பத்துப். சிறுபாண். 122 129)