இது வடமொழியில் இதரேதராச்ரயம் என்னும் குற்றமாம்; அந்யோந்யாச்ரயம்
எனவும் பெயர் பெறும். இதனைத் தடுமாற்றம் எனவும் கூறுப.
இடனும் பற்றுக்கோடும் சார்ந்து உகரம் குறுகும் எனவும், இடனும்
பற்றுக்கோடும் குற்றியலுகரத்துக்குச் சார்பாக வரும் எனவும் கூறுதல்
ஒன்றனை ஒன்று பற்றுதலாம். (சூ. வி. பக். 50)
வினைமுற்றுச் சொல் பெயராயவாற்றால் ஓசை வேறுபடும் எனவும், ஓசை
வேறுபட்ட காரணத்தான் வினைமுற்றுச் சொல் பெயராம் எனவும் கூறுதலும்
‘ஒன்றனை ஒன்று பற்றுதல்’ என்றும் குற்றமாம். (சூ. வி. பக். 54)
குற்றியலிகரம் என்னும் குறியீட்டால் நாகு+ யாது = நாகியாது – என்று
புணர்ச்சிவிதி கூறி, அங்ஙனம் செய்கை செய்த பின்னர் அவ்வெழுத்தைக்
குற்றியலிகரம் என்று கூறுவது ‘ஒன்றனை ஒன்று பற்றுதல்’ என்னும்
குற்றமாம் எனின், ஆகாது. நாகு+யாது=நாகியாது – என்று புணர்ந்தவழி,
அப்புணர்ச்சி வழு என்று காணலுற்றுழி, ‘யகரம் வருவழி இகரம் குறுகும்’
என்னும்சூத்திரம் வழாநிலை உணர்த்த வந்ததல்லாது, முன் இல்லாத
குற்றியலிகரத்தை விதிக்க வந்ததன்று ஆதலின், இங்ஙனம் கோடற்கண் ‘ஒன்றனை
ஒன்று பற்றுதல்’ என்ற குற்றமில்லை. (சூ. வி. பக். 20, 21)