ஒன்பது விகாரமும் திரிபுமூன்றில் அடங்குதல்

விரித்தல் தோன்றலாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்ட லும்
குறுக்கலும் திரிபாகவும், தொகுத்தலும் மூவிடத்துக் குறைதலும்
கெடுதலாகவும் அடக்கி ஒன்பது செய்யுள் விகாரமும் திரிபு மூன்றென
அமையும் என்பது. (இ.வி. 58)
செய்யுளிடத்து அல்வழி வேற்றுமையால் வரும் மூன்று விகாரமும்
வலித்தல் முதலிய ஒன்பது விகாரமும் வருதலால் வேறுபாடு அறிவதற்கும்,
விரித்தல் தோன்றல் விகாரமாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்டலும்
குறுக்கலும் திரிதலாக வும், தொகுத்தலும் மூவழிக்குறைதலும்
கெடுதலாகவும், இந்த மூவகையுள் அவ்வொன்பது வகை விகாரங்களும் அடங்கும்
என்பது அறிவித்தற்கும், செய்யுட்கேயுரிய ஒன்பது விகாரங் களையும்
புணர்ச்சி விகாரங்களொடு கூறினார். (நன். 156 இராமா.)