திருவத்தூர் என்றும் திருவத்திபுரம் என்றும் செய்யாறு என்றும் சுட்டப்படும் இவ்வூர் இன்று வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலத்தில் ஆண்பனை பெண்பனையாயிற்று. ஒத்து – வேதம் இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடம் என்ற கருத்து ஊர்ப்பெயர்க் காரணமாக அமைகிறது. திருவோத்தூர் என்ற பெயர், மக்கள் மொழி எளிமை கருதி மருவிய நிலையில் திருவத்தூர் எனவும், திருவத்தி புரம் எனவும் மாறி அமைகிறது. கல்வெட்டுகளிலும் ஓத்தூர் என்றே சுட்டப்படுகிறது. சேயாற்றங்கரையில் உள்ளமையால் செய்யாறு எனப் பெயர் வழக்கு அமைகிறது. ஓதக்கூடிய அந்தணர் வாழ்ந்த இடமாகவும் ஓத்தூர் இருக்கலாம். தொண்டைத் திருநாட்டில் திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூர் ( 34-973 ) என சேக்கிழார் பாடல் அமைகிறது.