ஐகாரக் குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும் ஒரோ வொன்று
ஒன்றரை மாத்திரை. ஒன்றரை அறிவது எற்றாலோ எனின், ‘கட’ என்புழி டகரஅகரம்
ஒருமாத்திரை ஆயவாறும், ‘கடா’ என்புழி டகரஆகாரம் இரண்டு மாத்திரை
ஆயவாறும், ‘கடை’ என்புழி டகரஐகாரம் ஒரு மாத்திரையில் ஏறி இரண்டு
மாத்திரையின் குறைந்தவாறும் கண்டுகொள்க. (நேமி. எழுத். 5 உரை)