ஐ ஒரு மாத்திரை அளவிற்றாதல்

ஐகாரம் ஒரு சொல்லின் முதல் இடைகடை என்ற மூவிடத் தும் குறுகும். அது
செய்யுட்கண் ஓசை இடர்ப்பட்டு ஒலிக்கு மிடத்துக் குறுகுதலே
பெரும்பான்மை.
‘ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே’
‘அடைப்பையையாய் கோல்தா எனலும்’
(‘யாரை’ என்புழிப்போல ஐகாரம் அசை; ‘அடைப்பையாய்’ என்பதே விளி.)
தவளை, குவளை
என ஐகாரம் முதல் இடை கடை என்ற மூவிடத்தும் மொழிக் கண் குறுகிற்று.
(தொ. எ. 57 நச். உரை)
மொழிமுதற்கண் ஐகாரம் குறுகின் ஒன்றரை மாத்திரை அளவிற்று எனவும்,
இடைக்கண்ணும் இறுதிக்கண்ணும் குறுகின் ஒரு மாத்திரை அளவிற்று எனவும்
கொள்ப. (நன். 95. சிவ.) (அவிநயம்.)
மொழிமுதற்கண் ஐகாரம் குறுகாது என்றார் இளம்பூரணர்.
(தொ. எ. 57)
சிவஞானமுனிவரும் இக்கருத்தினர். (சூ. வி. பக். 31)
நச். ஓரெழுத்தொருமொழியும் குறுகும் என்றார். கை, பை- என்பன
குறுகின் கய், பய், – என ஒன்றரை மாத்திரை அளவினவாம். (தொ. எ. 57
உரை)
ஐகாரம் மொழிமுதற்கண் குறுகாது. இடையினும் இறுதி யினும் சிறுபான்மை
குறுகும். அவ்வாறு குறுகுமிடத்து ஒரு மாத்திரையளவு ஒலித்தல்
பெரும்பான்மை; ஒன்றரை மாத்திரை ஒலித்தல் சிறுபான்மை எனக் கொள்க. (எ.
ஆ. பக். 65)
ஐகாரம் ஒன்றரை மாத்திரை அளவிற்றாய்க் குறுகும் என்பது யாப்பருங்கல
உரை. நேமிநாதம் மூன்றிடத்தும் ஐகாரம் குறுகும் என்றது. வீரசோழியம்
ஐகாரம் ஒன்றரை மாத்திரை யாய்க் குறுகும் என்றது. நன்னூல் ஐகாரம்
மூவிடத்தும் குறுகும் என்றது. இலக்கண விளக்கமும் அதுவே.