ஐயாறு

இன்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் ஊர் திருவையாறு என்றே வழங்கப்படுகிறது. தேவார மூவரும் பாடிய பதிகங்கள் பெற்ற ஊர் இது. மாணிக்கவாசகரும் இவ்வூரைச் சுட்டுகின்றார். சிவபெருமான் திரு இரட்டைமணி மாலையும் ( 30 ) ஷேத்திரச் கோவையும் ( 3 ) இதனைக் சுட்டுகின் றன. இவை, ஐயாறு காவிரிக் கரையில் இருக்கும் நிலையையும் சிறந்த நகரமாகத் திகழ்ந்த நிலையையும் காட்டுகின்றன.
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு பெரிய திருஞா. 373
அழகியப் பங்கய வாவி ஐயாறு பெரிய திருஞா. 299
மாடவீதி மணிவீதித் திருவையாறு
ஆடலொடு பாடல் அறா அணிமூதூர் —–300
வடகரையில் திருவையாறு எதிர்தோன்ற
கடல் பரந்ததென பெருகும் காவிரி பெரிய கழறிற் – 131
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் தே. திருநா. 298
அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
ஆடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா – திருப் பொற் – 1-4
அலையத் தடம் பொன்னிசூழ் திருவையாற்றருமணியே பட்டி – திருஏகம் – திருவந்தாதி 56
மேலும் இவ்வூர் காவிரிக் கரையில் உள்ளது என்னும் போதே இதன் செழிப்பு பற்றி ஐயம் எதுவும் இல்லை.
முத்திசையும் புனற் பொன்னி
மொய்பவளம் கொழித்தந்தப்
பக்தர் பலர் நீர் மூழ்கிப்
பலகாலும் பணிந்து ஏத்த
எத்திசையும் வானவர்கள்
எம்பெருமான் என இறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறு
என அப்பரும்,
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட
முழவு அதிர மழையென் றஞ்சி
சில மந்தி அலமந்து மரம் ஏறி
முகில் பார்க்கும் திருவையாறு
என ஞானசம்பந்தரும் ஐயாற்றின் பெருமையைப் பாடுகின்றனர். ஐயாறு பற்றிய பல பாடல்களிலும் பொன்னிவளமும் சிறப்பிக்கப் படுகின்றது. இதன் பெயர்க்காரணம் கூறும்போது, பல கருத்துகள் சுட்டப்பட்டாலும் அழகிய ஆறு ஓடி அப்பகுதியை மிகவும் செழிப்புக்குள்ளாக்கியிருக்க வேண்டும் என்ற நிலையிலேயே இப்பெயர் அமைந்திருக்க வேண்டும். மேலும் ஐயாறு என்ற பெயர் பின்னர் இடைக்காலத்திய சிவன் கோயில் சிறப்பு பெற்ற நிலையில் திருவையாறு என்றே சுட்டப்படத் தொடங்கி யிருக்கலாம் எனத் தோன்றுகிறது. கல்வெட்டுகளில் ஐயாறுடைய அடிகள் என்று சுட்டும் தன்மையைக் காண்கின்றோம். தஞ்சையிலிருந்து திருவையாறு வரும் வழியில் வடவாறு. வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்ற ஐந்து நதிகள் கலப்பதால் ஐயாறு என்ற பெயர். வேங்கடம் முதல் குமரி வரை காவிரிக் கரையிலே பக். 178 .