ஐகார வேற்றுமைத் திரிபுகள்

1. ‘மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு வருதல்’: அஃதாவது மெல்லெழுத்து
மிக வேண்டிய இடத்து வல்லெழுத்து மிகுதல்.
அகர ஈற்று மரப்பெயர்கள் வேற்றுமைப்புணர்ச்சியில் வன் கணம்
வரின், வந்த வல்லெழுத்தின் இனமெல்லெழுத்து மிகும். (தொ. எ. 217 நச்.)
எ-டு : விள
ங்கனி, விள
ம்பூ
ஆயின் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயின் விளக் குறைத்தான் – என வந்த
வல்லெழுத்தே மிகும்.
2. ‘வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றல்’:
மகர ஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மகரம் கெட, வந்த
வல்லெழுத்து இடையே மிக்குப் புணர்தல் மரபு (310 நச்.) எ-டு :
மரக்கிளை, மரச்சினை, மரத்தோல், மரப் பட்டை.
ஆயின் இரண்டாம் வேற்றுமைத்தொகையாயின், மகரம் கெட, வந்த
வல்லெழுத்தின் இனமெல்லெழுத்தே மிகும். எ-டு : மரங் குறைத்தான்.
3. ‘இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றல்’:
யகர ஈற்றுத் தாய் என்னும் முறைப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். (358 நச்.) எ-டு : தாய்கை,
தாய்செவி, தாய்தலை, தாய்புறம்.
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில், தாயைக் கொன்ற கொலை
– என்ற பொருளில், தாய்க் கொலை – என வல்லெழுத்து மிக்குப் புணரும்.
4. ‘உயிர்மிக வருவழி உயிர்கெட வருதல்’:
குற்றெழுத்தை அடுத்தோ தனித்தோ வரும் ஆகார ஊகார ஏகார ஈற்றுப்
பெயர்கள், வேற்றுமைப்புணர்ச்சியில் வன்கணம் வர, எழுத்துப்பேறளபெடையும்
வல்லெழுத்தும் மிக்குப் புணரும். (226, 267, 277 நச்.) எ-டு :
பலாஅக்கோடு, உடூஉக்குறை, ஏஎக்கொட்டில்
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், வருமொழி முதற்கண்
வன்கணம் வரின், வந்த வல்லெழுத்தே மிக்குப் புணரும். எ-டு : பலாக்
குறைத்தான், கழூக் கொணர்ந்தான், ஏக் கட்டினான்
5. ‘சாரியை உள்வழிச் சாரியை கெடுதல்’:
வண்டு, பெண்டு – என்பன வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண் இன்சாரியை
பெற்றுப் புணரும் என்பது விதி. (420 நச்.) எ-டு : வண்டின்கால்,
பெண்டின் தலை
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சாரியை இன்றி வன்கணம்
வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : வண்டு கொணர்ந்தான், பெண்டு
கொணர்ந்தான்
6. ‘சாரியை உள்வழித் தன்உருபு நிலையல்’:
சாரியை பெறுமிடத்து, வண்டின் கால் – பெண்டின் தலை – என ஆறாம்
வேற்றுமையுருபு மறைந்து வருவதைப் போலல் லாது, பெரும்பாலும் தன்னுருபு
நிலைபெற்றே வண்டினைக் கொணர்ந்தான் – பெண்டினைக் கொணர்ந்தான் – என்று
தன்னுருபு விரிந்தே வருதல்.
7. ‘சாரியை இயற்கை உறழத்தோன்றல்’:
புளி, பனை, வேல் – முதலிய மரப்பெயர்கள் அம்முச்சாரியை பெற்றே
வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழிப் புணரும். (244, 283, 375
நச்.) எ-டு : புளியங்காய், புளியஞ் செதிள்;பனங்காய், பனந்தோல்;
வேலங்காய், வேலம்பட்டை
ஆயின் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சாரியை பெறாது வன்கணம்
வந்துழி, வல்லெழுத்து மிகாமலும் மிக்கும், ஈறு திரியாமலும் திரிந்தும்
புணரும். எ-டு : புளி குறைத்தான், புளிக் குறைத்தான்; பனை தடிந்தான்,
பனைத் தடிந்தான்; வேல் தடிந்தான், வேற்றடிந்தான்
8. ‘உயர்திணை மருங்கின் ஒழியாது வருதல்’:
உயர்திணைப் பெயர்கள் பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் இயல்பாகப்
புணரும்என்பது விதி. (153 நச்.) எ-டு : நம்பி கை, நம்பி தலை; நங்கை
கை, நங்கை செவி.
ஆயின் இரண்டாம் வேற்றுமைக்கு வன்கணம் வந்துழிஉருபு விரிந்து
வருமொழி வல்லெழுத்து மிக்கு வரல்வேண்டும்.
எ-டு : நம்பியைக் கொணர்ந்தான், நங்கையைக் கண்டான்
சிறுபான்மை உருபு மறைந்து, ‘ஒன்னார்த் தெறலும்’ (குறள் 264), என்று
மிக்கும், ‘ஆடூஉ அறிசொல்’ என்று உகரப்பேறு எய்தியும், அவற்கண்டு (அக.
48) மகற் பெற்றான், மகட் பெற்றான் என ஈறு திரிந்தும், ‘மழவர் ஓட்டிய’
(அகநா.1) என்று இயல்புகணத்துக்கண் இயல்பாயும் வருதலுமுண்டு.
9. அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையல்’:
உயர்திணையோடு அஃறிணை விரவும் பொதுப்பெயர் வேற்றுமைப்புணர்ச்சிக்கண்
உயர்திணைப்பெயர் போல வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும். (155
நச்.) எ-டு : சாத்தன் கை, கொற்றன் செவி, சாத்திதலை
ஆயின் இரண்டாம் வேற்றுமைக்கண் உருபு விரிந்தே வருதல் வேண்டும்.
(155 நச்.)
எ-டு: கொற்றனைக் கொணர்ந்தான், சாத்தனைத் தகைத்தான். சிறுபான்மை
சாத்தற் கண்டு, கொற்றற் சார்ந்து – என இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கு
நிலைமொழியீற்று னகரம் றகரமாகத் திரிந்து வருதலுமுண்டு. (உருபு தொக்கமை
யாற்றான் இத்திரிபு என்க)
10. ‘மெய்பிறிது ஆகுஇடத்து இயற்கை ஆதல்’:
ணகர னகர ஈறுகள் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்
முறையே டகர றகரங்களாகத் திரியும் என்பது பொதுவிதி. (302, 332 நச்.)
எ-டு : மட்குடம், பொற்குடம்
ஆயின் இரண்டாம் வேற்றுமையுருபு தொக்க புணர்ச்சியில் வன்கணம்
வருமொழியாக வருவுழித் திரிபின்றிப் புணரும்.
எ-டு : மண் கொணர்ந்தான், பொன் கொணர்ந்தான்
11. ‘அன்ன பிறவும் ஐகார வேற்றுமைத் திரிபு’:
யான் என்பது என் என்று திரிந்து வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில்
வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். ஏனை நெடுமுதல் குறுகும்
பெயர்களும் அவ்வாறே முடியும்.
எ-டு : என்கை, என்செவி, என்தலை, என்புறம்
ஆயின், யான் யாம் நாம் நீ தான் தாம் – என்பன நெடுமுதல் குறுகி என்
எம் தம் நின் தன் நம்- என்றாகிய நிலையில், இரண்டன் உருபு தொக்க
புணர்ச்சிக்கண், என்+ கண்டு = எற்கண்டு; தன்+ கொண்டான் = தற்கொண்டான்;
நம் + புணர்வு = நப்புணர்வு; என்றாற்போல, நிலைமொழி ஈற்று மெய்
திரிந்து புணரும். (உருபு தொக்கமையாற்றான் இத்திரிபு என்க.)
ஐகாரஈற்றுப் பெயரும் ரகரஈற்றுப் பெயரும் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண், வன்கணம் வரின், வல்லெழுத்து மிக்குப் புணரும்
என்பது பொது விதி. (280, 362 நச்.)
எ-டு : யானைக்கோடு, தேர்க்கால்
ஆயின், இரண்டாம் வேற்றுமைத் தொகையாயின் வன்கணம் வரினும்
இயல்பாம்.
எ-டு : தினை பிளந்தான், மயிர் குறைத்தான்
சிலவிடத்தே இன்சாரியை பெறும் நிலைமொழிகள் இரண்ட னுருபு விரியாது
வருமொழியொடு புணரும் நிலையும் அருகியுண்டு. எ-டு : ‘மறங்கடந்த
அருங்கற்பின்… துணைவியர்’ (புற. 166) (கற்பினையுடைய துணைவியர்)
‘சில்சொல்லின்…. துணைவியர்’ (சொற்களையுடைய துணைவியர்) ‘ஆயிரு
திணையின் இசைக்குமன சொல்லே’ (சொ.1) (இருதிணை யினையும் இசைக்கும்)
இவையே யன்றிப் பொதுவிதியைப் பின்பற்றிக் கடுக்குறைத் தான் (254
நச்.) செப்புக்கொணர்ந்தான் (414 நச்.) என்று முடிவனவும்,
மைகொணர்ந்தான்- மைக்கொணர்ந்தான், வில்கோள் – விற்கோள் என உறழ்வனவும்
கொள்க. (தொ. எ. 157 நச். உரை)
கழி குறைத்தான், தினை பிளந்தான் – என்ற இயல்பும் கொள்க. (158 இள.
உரை)