மொழி முதற்கண் அகரமும் இகரமும் இணைந்து ஐகாரத் திற்கு
மாற்றெழுத்துக்களாம். மொழி முதற்கண் அகரமும் உகரமும் இணைந்து
ஒளகாரத்திற்கு மாற்றெழுத்துக்களாம்.
எ-டு : அ) ஐவனம் என்பது அயிவனம் என வரும். (யகர உடம்படுமெய்
பெற்று வருதலே சான்றோர் வழக்கில் காணப்படுகிறது. அய்இவனம் –
அயிவனம்)
வைரம், கைலை என்பன வயிரம் கயிலை எனவரும். (இவை வடசொற்கள்)
ஆ) கௌரியர் என்பது கவுரியர் எனவும், மௌரியர் என்பது மவுரியர்
எனவும், மௌலி என்பது மவுலி எனவும்,
ஒளடதம் என்பது அவுடதம் எனவும் வரும். (இவை வட சொற்கள்).
இனி, மொழியிடையிலும் ஈற்றிலும் வரும் ஐகாரத்திற்குப் பிறிதொருவகை
மாற்றெழுத்து வருமாறு:
அகரத்தின் பின்னர் இகரமேயன்றி, அகரமும் அதன்பின் யகர ஒற்றும் ஐ
என்னும் நெட்டெழுத்தினது பொருள்பட வரும்.
எ-டு : நிலையம் – நிலயம்; குவளை – குவளய்; வினையம் –
வினயம்
அய் என்னும் இவ்வெழுத்துக்கள் மொழி முதல் ஐகாரத் திற்கு
மாற்றெழுத்துக்களாய் வரின் மாத்திரையளவு ஒன்றுமே வேறுபடுகிறது.
ஓசையாலும் அசைகொள்ளும் நிலையாலும் எவ்வேறுபாடும் அங்கு இன்று. ஆதலின்,
இவ்வெழுத்துக்கள் மாற்றெழுத்துக்களாய் மொழியிடையிலும் ஈற்றிலுமே வரும்
என்று உய்த்துணரப்படும்.
இம்மாற்றெழுத்தின் பயனாவது, செய்யுட்கண் சீரும் தளையும் சிதைய
வருமிடத்து அவை சிதையாமல் செய்துகோடலாம்.
எ-டு : ‘அன்னையையான் நோவ தவமால்’ என்புழி, வெண்பாவில்
நாலசைச்சீர் வந்து சீரும் தளையும் சிதையும்; அன்னயையான்’ என
மாற்றெழுத்தாற் கூறின் அவை சிதையாவாம் என்க. (தொ.எ.56. ச.பால.)