ஐகார ஈற்று அல்வழிப் புணர்ச்சி

ஐகாரஈற்றுப் பெயர் எழுவாய்த்தொடர்க்கண் இயல்பாயும் உறழ்ந்தும்
புணரும்.
எ-டு : காரை குறிது – இயல்பு; தினை குறிது, தினைக்குறிது –
உறழ்ச்சி
ஐகாரஈற்றுப் பெயர் இருபெயரொட்டு ஆதற்கண் மிக்குப் புணரும்.
எ-டு : சித்திரைத்திங்கள், புலைக்கொற்றன்.
உவமத்தொகைக்கண்ணும் குவளைக்கண்- என்றாற்போல மிக்குப் புணரும். வினை
இடை உரிச் சொற்கள் பெரும் பான்மை மிக்குப் புணரும்.
எ-டு : ஒல்லைக் கொண்டான் – ஐகார ஈற்று வினைச்சொல் வல்லெழுத்து
மிக்கது; தில்லைச் சொல் – ஐகார ஈற்று இடைச்சொல் வல்லெழுத்து மிக்கது;
பணைத் தோள் – ஐகார ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கது.
எனவே, ஐகார ஈ.ற்றுச் சொற்கள் எழுவாய்த்தொடர்க்கண் பெரும்பான்மை
இயல்பாகவும், சிறுபான்மை உறழ்ந்தும், இருபெயரொட்டும் உவமத்தொகையும்
என்பனவற்றின்கண் மிக்கும், வினை இடை உரிச்சொற்களாயின் பெரும்பான்மை
மிக்கும் புணரும். (தொ. எ. 158. நச். உரை)