ஐகாரம் மொழிமுதற்கண் குறுகும் எனவும், கை – பை – முதலியனவும்
பொருளைச் சுட்டியவழிக் குறுகும் எனவும் கூறுதல் பொருந்தாது. இடையன்
மடையன் தினை பனை – என்புழிக் குறுகுதல் போல, ‘வைகலும் வைகல்
வரக்கண்டும்’ (நாலடி. 39) என்புழி ஐகாரம் முதற்கண் குறுகாமை செவி
கருவியாக உணரப்படுதலானும், ‘வைகலும் வைகல்’ என்புழிக் குறுகுமாயின்,
‘வைகல்’ என்பது குறிலிணை ஒற்றாய் வெண்டளை சிதைதலானும், ஐகாரம்
மொழியிடைப்படுத்து இசைப்பின் யாண்டு வரினும் குறுகும் என்றல்
பொருந்தாமை யானும், ஐகாரம் மொழி முதற்கண் குறுகாது எனவே கொள்ளு தல்
சிவஞான முனிவர் கருத்தாம். எழுத்ததிகார ஆராய்ச்சி யும் இதனையே
கொள்கிறது. (சூ. வி. பக். 31, எ. ஆ. பக். 65)