‘ஏவல் குறித்த உரையசை மியா’ புணருமாறு

முன்னிலை ஏவல்வினையைக் கருதி வரும் எதிர்முகமாக்கும் சொல்லினைச்
சேர்ந்த மியா என்னும் ஆகார ஈற்றுச் சொல். இஃது இடைச்சொல்லாம். இது
வருமொழி வன்கணத்தோடு இயல்பாகப் புணரும்.
எ-டு : கேண்மியா +கொற்றா = கேண்மியா கொற்றா (தொ. எ. 224
நச்.)
முன்னிலையில் ஏவல்வினைச்சொல்லைக் குறித்து வரும் உரை யசையாகிய மியா
என்னும் ஆகார ஈற்று இடைச்சொல். (225 இள.)
நச்சினார்க்கினியர் ‘உரையசை’ என்பதற்குக் கேள் என்றாற் போன்ற
எதிர்முகமாக்கும் சொல் என்று பொருள் கொண் டார். இளம்பூரணர் வினையைச்
சேர்ந்தே முன்னிலைப் பொருள் தரும் மியா என்ற இடைச்சொல் என்றே பொருள்
கொண்டார்.
ஏவல் குறித்த உரையசை என்பதும், முன்னிலை அசைச்சொல் என்பதும்
ஒருபொருட் கிளவியாகும். ஆகவே, முன்னிலை அசைச்சொல்லாகிய மியா என்பதே
ஏவல் குறித்த உரை யசைச் சொல்லாம். (எ.கு.பக். 213)