‘ஏவல் கண்ணிய வியங்கோள்’ புணருமாறு

ஏவல் கண்ணிய வியங்கோளாவது ஏவல் தன்மை கருதிக் கூறப்பட்ட
ஏவல்பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகரஈற்று வினைச்சொல். அது
வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும்.
எ-டு : (அவன்) செல்க காட்டின்கண், செறுவின்கண், தானைக்கண்,
போரின்கண்
‘ஏவல் கண்ணிய’ எனவே, ஏவல் கண்ணாத வியங் கோளும் உண்டு. அஃறிணை
ஏவற்பொருண்மையை முற்ற முடிக்காது.
எ-டு : (அது) செல்க காட்டின்கண்,….
தொல்காப்பியனார் அகரஈறு ஒன்றனையே வியங்கோள் ஈறாக
எடுத்தோதியுள்ளார்; வியங்கோள் படர்க்கையிடத் திற்கே உண்டு என்றும்
கூறியுள்ளார். (தொ. எ. 210. நச்.)
ஏவல் கண்ணாத வியங்கோளுக்கு ‘மன்னிய பெரும நீயே’ என்று இளம்பூரணர்
எடுத்துக்காட்டுத் தந்துள்ளார் (211 இள.). கூறுகின்றான், அவன்
நிலைபெற்றிருத்தல் வேண்டும் என்றே கருதிக்கூறலின், அதுவும் ஏவல்
கண்ணிற்றேயாம் என்பர் நச்.
வாழிய என்பது ஏவல் கண்ணாதது என்பதும், வாழி என்பது ஏவல்
கண்ணியதுஎன்பதும் இளம்பூரணர் கருத்து. (212 இள.)