ஏழ் என்ற எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி

ஏழ் என்ற ழகர ஈற்று எண்ணுப்பெயர் உருபேற்குங்கால் அன்சாரியை
பெறும். (தொ.எ. 194 நச்.)
வருமாறு : ஏழனை, ஏழனொடு
பொருட்புணர்ச்சிக் கண்ணும் ஏழ் அன்சாரியை பெறும்.
எ-டு: ஏழன்காயம், ஏழன்சுக்கு, ஏழன்தோரை, ஏழன்பயறு, (இவற்றிற்கு
ஏழனாற் கொண்ட காயம் – என்றாற்போல, வேற்றுமை வழியான் பொருள் செய்க.)
(388 நச். உரை)
ஏழ் என்பது நிலைமொழியாக, வருமொழிக்கண் எண்ணுப் பெயரும்
நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வரின், ஏழ் என்பது ‘எழு’ என்று முதல்
குறுகி ழகரம் உகரம் ஏற்றுப் புணரும்.
எ-டு : எழுநான்கு, எழுகழஞ்சு, எழுநாழி
சிறுபான்மை பொருட்பெயர் வருமொழியாய வழியும், ஏழ் ‘எழு’ எனத்
திரிந்து புணரும்.
எ-டு : எழுகடல், எழுசிலை, எழுதிசை, எழுபிறப்பு (389 நச்.
உரை)
ஏழ் நிலைமொழியாக வருமொழியாகப் பத்து என்பது வரின் எழுபஃது எனப்
புணரும். (390 நச்.)
ஏழ் நிலைமொழியாக ஆயிரம் வருமொழியாகவரின், ஏழ் என்பது ‘எழ்’ எனக்
குறுகி, எழாயிரம் எனப்புணரும். (391 நச்.)
ஏழ் நிலைமொழியாக வருமொழி நூறாயிரம் வரின், இயல்பாக ஏழ் நூறாயிரம்
என்றே புணரும். (392 நச்.)
சிறுபான்மை ஏழாயிரம் எனவும், எழு நுhறாயிரம் எனவும் அமைதலும்
உண்டு. வருமொழிப் பொருட்பெயர்கள் இயல்பு கணத்தில் தொடங்கினும், ஏழ்
நெடுமுதல் குறுகி உகரம் பெற்று, எழுஞாயிறு, எழுநாள், எழுவகை – எனப்
புணரும். (392 நச். உரை)
தாமரை வெள்ளம் ஆம்பல் என்ற பேரெண்கள் வர, ஏழ் தாமரை – ஏழ்வெள்ளம் –
ஏழாம்பல் – என இயல்பாகப் புணரும். உயிர்முதல் மொழி வரினும், ஏழகல் –
ஏழுழக்கு- ஏழொன்று – என இயல்பாகப் புணரும். (393, 394 நச்.)