அதோளி, இதோளி, உதோளி, எதோளி, ஈதோளி, ஆண்டை, ஈண்டை, ஊண்டை, யாண்டை-
என்னுமிவை வன்கணம் வந்துழி மிக்குப் புணரும். அவ்வழி, இவ்வழி, உவ்வழி,
ஆங்கவை, ஈங்கிவை, ஊங்கவை, யாங்கவை – என்னுமிவை வன்கணம் வந்துழி
இயல்பாயும் மிக்கும் உறழ்ந்தும் புணரும். இவை பெயர் நிலையின. (தொ. எ.
159. நச். உரை 160 இள.உரை)
ஆயிடை முதலியன திரிபுடையனவாம்; இவையும் வன் கணம் வந்துழி உறழ்ந்து
புணரும். (159 நச். உரை)
இனி, அணி – என்பன மிக்குப் புணரும். (236 நச்.)
அங்கண், இங்கண், உங்கண், எங்கண், ஆங்கண், ஈங்கண், ஊங்கண், யாங்கண்,
அவண், இவண், உவண், எவண்- என்னுமிவை, வன்கணம் வந்துழி, ணகர ஒற்று டகர
ஒற்றாகத் திரிந்தே முடிவன. (307 உரை நச்.)
ஆன், ஈன், பின், முன் – என்னுமிவை வன்கணம் வந்துழி னகரஒற்று
றகரஒற்றாகத் திரிந்தேபுணரும். (333 நச்.)
அவ்வயின், இவ்வயின், உவ்வயின், எவ்வயின் – என்னுமிவையும் வன்கணம்
வந்துழி னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிந்தே புணரும். (334 நச்.)
ஊன் (உவ்விடம்) என்பது ஊன் கொண்டான் என்றாற்போல இயல்பாகவே புணரும்.
(333 நச். உரை)
அவ்வாய், இவ்வாய், உவ்வாய், எவ்வாய்- என்னுமிவை வன்கணம் வரின் வந்த
வல்லெழுத்து மிக்குப் புணரும். (361 நச். உரை.)
அக்கால் என்பது வன்கணம் வரின் லகரம் றகரமாகத் திரிந்து புணரும்.
(368 நச். உரை)
அதோள், இதோள், உதோள், எதோள் – என்னுமிவை வன்கணம் வரின் ளகரம்
டகரமாகத் திரிந்து புணரும். (398 நச். உரை)
ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு, அங்கு, இங்கு, உங்கு, எங்கு-
என்னுமிவை வன்கணம் வரின் வல்லொற்று மிக்கும் ‘யாங்கு’ஒன்றும் ஒரோவழி
இயல்பாகவும் புணரும். (427, 428 நச். உரை)
முந்து, பண்டு, இன்று, அன்று – என்பன வன்கணம் வரின் இயல்பாகப்
புணரும். (429 நச். உரை)
முந்தை, பண்டை, இன்றை, அன்றை- என்பன வன்கணம் வரின் வல்லெழுத்து
மிக்கே புணரும். இவை யாவும் பெயர் நிலையின. (159 நச். உரை)