மாறுகோடலையுடைய எச்சப்பொருள், வினாப்பொருள், பிரிநிலைப் பொருள்,
ஈற்றசைப் பொருள், எண்ணுப் பொருள் – முதலியவற்றில் வரும் ஏகார
இடைச்சொல் வருமொழி வன்கணம் வந்துழியும் இயல்பாகப் புணரும்.
எ-டு : யானே கொண்டேன்? – என்பது யான் கொண் டிலேன் என மாறுகோடல்
ஆகிய எதிர்மறைப் பொருளைச் சொல்லு வானது ஒலித்தல் குறிப்பான்
உணர்த்துவது.
நீயே கொண்டாய்? – ஏகாரம் சொல்வானது ஒலித்தல் குறிப்பான்
வினாப்பொருளை உணர்த்துவது.
அவருள் இவனே தக்கவன்- ஏகாரம் பலரினின்றும் ஒருவனைப் பிரித்தமையான்,
பிரிநிலைப் பொருளை உணர்த்துவது.
காடு கழிந்தோரே காதலர் – ஈற்றசைப் பொருளில் வந்தது.
நிலனே நீரே தீயே – எண்ணுப் பொருளில் வந்தது.
இவையாவும் இயல்பாகப் புணர்ந்தவாறு.
தேற்றப்பொருளில் வரும் ஏகாரம் அளபெடுத்தலும், ஈற்றசை யாக வரும்
ஏகாரம் சிறுபான்மை ஒரு மாத்திரை நீண் டொலித்தலும் பண்டை மரபு.
சாத்தனே செல்க – ஏகாரம் விளிப்பொருளில் வந்தது. (இசை நிறை,
இகழ்ச்சிக்குறிப்பு, இரக்கக் குறிப்பு- முதலிய பொருள் களில் வரும்
ஏகாரங்கள் அடுக்கியும் அளபெடுத்தும் வரினும் அவையும் வன்கணம்
வருமிடத்தும் இயல்பாகவே புணரும்.) (தொ.எ. 275 நச். உரை)