ஏகாரஈற்றுச் சொல் ஊகாரஈற்றுச் சொல் போல வருமொழி யில் வன்கணம்
வந்துழி அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் ணும் வல்லெழுத்து மிக்கு
முடியும்.
எ-டு : ஏக் கடிது, சேக் கடிது – அல்வழி
ஏக்கடுமை, வேக்குடம் – வேற்றுமை (வேக்குடம் – வேதலையுடைய
குடம்)
சிறுபான்மை உருபிற்குச் சென்ற சாரியை பொருட்புணர்ச்சிக்- கண்ணும்
பொருந்த, ஏவின் கடுமை- என இன்சாரியை பெறுதலு முண்டு.
வேற்றுமைக்கண் ஏகார ஈறு வருமொழி வன்கணம் வரின் எகரப்பேறும்
வல்லினமும் பெற்று முடிதலும், இயல்பு கணத்துள் எகரம் பெற்று முடிதலும்
கொள்க.
எ-டு : ஏஎக்கொட்டில்; ஏஎநெகிழ்ச்சி, ஏஎவன்மை, ஏஎ அருமை
(ஏஎவருமை)
சே என்ற பெயர் மரத்தைக் குறிப்பின் வருமொழி வன்கணம் வரின் இயல்பான
மெல்லெழுத்துப்பேறும், பெற்றத்தைக் குறிப்பின் இன்சாரியைப் பேறும்
கொள்ளும்;
சேங்கோடு (மரம்) ; சேவின் கோடு, சேவின் மணி, சேவினிமில்
(பெற்றம்)
சிறுபான்மை இன் பெறாது ‘சேமணி’ என இயல்பாக முடிதலும் கொள்க. (தொ.
எ. 274, 276-279 நச்.)