இது தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது எழுத்து; ஒரு மாத்திரை அளவிற்றாய
குறில். இதன் இனமாகிய நெடில் ஏ. எகரம் அகரக்கூறும் இகரக்கூறும்
சேர்ந்து அமைந்தது என்ற கருத்துத் தமிழ் எகரத்துக்கு அவ்வளவு
பொருந்தாது. எகரம் வாயை அங்காத்தலோடு அண்பல் அடியை நாவிளிம்பு உறப்
பிறக்கும் எழுத்துக்களுள் ஒன்று. இது மொழிமுதற்கண் வினாவாக வரும்.
எவன் என்ற வினாவினைக்குறிப்புக்கு இஃது அடியாக வருவது; அறியாப்
பொருள்வயின் செறியத் தோன்றுவது. இதனைத் தமிழ்ச்சிறப்பெழுத்து ஐந்தனுள்
ஒன்று என்ப. இது பிராகிருதத்திலும் உள்ளது. யகர முதல் வடசொற்கள்
தமிழில் எகர முதலாக, யந்த்ர- எந்திரம், யமன்- எமன் என்றாற் போல வரும்.
எகரம் அளபெடைக்கண்ணேயே ஈறாகி வரும். அஃது எம்மெய்யெழுத்தொடும் கூடி
ஈறாகாது.