எழுத்து முறை காட்டல்

எழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல் போல எழுத்திலக்கணம்
சொல்லுள் சென்று மயங்காத முறைமை- யானே எழுத்திலக்கணம்
தெரிவித்து…(தொ. பாயி. இள. உரை)
மூவகை இலக்கணமும் மயங்காத முறைமையால் செய்கின்ற மையின்,
எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி… (நச். உரை)
இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழும் முன்னூலுள் போல விரவாத
தன்மையானே, இயற்றமிழை வேறுபிரித்து முறையானே உலகிற்கு அறிவித்து….
(சூ.வி. பக். 3)
ஒன்றனுள் பிறிதொன்று கலவாத மரபினையுடைய நூல் முறையைக்
காட்டி….
‘முறைகாட்டி’ என்பதனை இரண்டன் தொகையாக்காமல் ‘முறையானே அறிவித்து’
என்ற மூன்றன்தொகையாகக் கொள்ளின், ‘ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்,
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே’ (தொ.எ.280. நச்.) என்ற
நூற்பாவிதிப்படி வல்லெழுத்து மிக்கு, ‘முறைக்காட்டி’ என அமைதல்
வேண்டும். அங்ஙனம் காணப்படாமையின் ‘முறை காட்டி’ என்பது மூன்றன் தொகை
ஆகாது. (பா. வி. பக். 234)
மேலும் பாயிரத்துள் அவையரங்கேறலைக் கூறலே முறை யன்றி, உலகிற்கு
அறிவித்தலைக் கூறல்இலக்கணமன்று ஆதலின், ’முறை காட்டி’ என்ற தொடர்க்கு
‘முறையானே உலகிற்கு அறிவித்து’ என்று பொருள் செய்தல் பொருந்தாது. (பா.
வி. பக். 141)