1. எழுத்தோடு ஒரு தன்மையன, 2. எழுத்தான் ஒரு தன்மையன. 1, ‘சார்ந்து
வரல் மரபின் மூன்று அலங்கடையே, எழுத்தெனப் படுப முப்பஃது’ எனவே,
சார்ந்து வரல் மரபின் மூன்றுமே சிறந்தன, ஏனைய முப்பதும் அவ்வாறு
சிறந்தில எனவும் பொருள் தந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த
முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கும் என, அம்முப்பதனை யும்
உபமானமான மேம்பட்ட பொருளாயும் இம்மூன்றனை யும் உபமேயமான அவற்றின்
தாழ்ந்த பொருளாயும் காட்டுதற்கு, ‘எழுத்தோடு ஒருதன்மையன’ என்று பொருள்
தரும் ‘எழுத்தோ ரன்ன’ என்று குறிப்பிட்டார். (தொ. எ. 2 இள., நச். உரை)
(பொ. 663 பேரா.)
2. எழுத்தான் ஒரு தன்மையன என்பது, ஒலிவடிவில் எடுத்தல் படுத்தல்
ஓசையான் வெவ்வேறு பொருள்தரும் சொற் றொடர்கள் வரிவடிவில் எழுதும்போது
ஒன்றாகவே எழுதப் படுதல்.
எ-டு : செம்பு ஒன்பதின்தொடியும், செம்பொன் பதின் தொடியும்
வரிவடிவில் ‘செம்பொன்பதின்றொடி’ என ஒன்றாக எழுதப்படுதல் போல்வன. (தொ.
எ. 141 நச். உரை)