எழுதப்படுவது என்னும் பொருட்கண், எழுது என்னும் முதனிலைத்
தொழிற்சொல்லின் முன்னர்ச் செயப்படு பொருளை உணர்த்தும் ஐகார விகுதி
புணர்ந்து ‘செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்’ (தொ.சொ. 450 சேனா.)
என்னும்சூத்திரத்து ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும்
முட்டின்று முடித்தல்’ என்னும் உத்திவகையான் அவ்வைகாரம் கெட்டுக்
கெட்ட வழித் தகரம் இரட்டித்து எழுத்து என்று முடிந்தது.
எழுது என்னும் முதனிலை ‘எழுத்து’ எனத் தானே திரிந்து நின்று, அஃது
ஆகுபெயரான் எழுதப்படுவதாகிய செயப்படு பொருளை உணர்த்திற்று என்றல்
பொருந்தாது. ஒரு காரண மின்றித் திரிதல் கூடாமையானும், நட-வா-கரு-செ-
முதலிய முதனிலைகள் எல்லாம்விகுதியோடன்றித் தனித்தியங்கல்
ஆற்றாமையானும், இம்முதனிலைகள் உரிச்சொற்கள்
ஆதலின்பெயர்த்தன்மைப்பட்டுழியல்லது ஆகுபெயர் ஆதற்கு ஏலாமையானும்
என்பது. (சூ. வி. பக். 31, 32)
எழுத்து என்பது எழுதை என்பதன் திரிபாயின், நட என்பது நடவாய்
என்பதன் திரிபு என்று கொள்ளும்போது, நட என்பது போல நடவாய் என்பதும்
வழங்குமாறு போல, எழுத்து என்பது போல எழுதை என்பதும் வழக்காற்றில்
இருத்தல் வேண்டும்; அங்ஙனம் இன்மையின், எழுத்து என்பது எழுதை என்பதன்
திரிபு எனல் சாலாது. விளங்கு – பெருகு- மடங்கு- முதலாய முதனிலைகள்,
விளக்கு – பெருக்கு – மடக்கு- முதலாகத் திரிந்து, விளங்குவது-
பெருகுவது – மடங்குவது – எனப் பொருள்படுமிடத்து வினைமுதலும்,
கெடு என்பது, கேடு எனத் திரிந்து ஒருவன் கெடுதற்குக் காரணமாகிய
தீவினையை உணர்த்தும்வழிக் கருவியும்,
நீந்து – முடங்கு – இடுகு – என்பன, நீத்து – முடக்கு – இடுக்கு –
எனத் திரிந்து நீந்துமிடத்தையும் முடங்குமிடத்தையும் இடுகு
மிடத்தையும் உணர்த்தும்வழி நிலனும்,
பாடு – சூடு – கருது – என்பன, பாட்டு – சூட்டு – கருத்து – எனத்
திரிந்து பாடப்படுவது – சூடப்படுவது – கருதப்படுவது – எனப்
பொருள்படும்வழிச் செயப்படுபொருளும்,
சுடு என்பது சூடு எனத் திரிந்து சுடுதலானாகிய வடுவினை
உணர்த்துமிடத்துப் பயனும் –
என வினை கொள்வவற்றுள்ளே தொழில் ஒழிந்த ஏனைய பொருள்களை ஆகுபெயரான்
உணர்த்துமாறு போல,
எழுது – உண் – முதலாகிய முதனிலைகளும் எழுத்து – ஊண்- முதலியனவாகத்
திரிந்து தொழிற்பெயர்ப்பொருளையும், ஆகு – பெயராகிச்
செயப்படுபொருளையும் உணர்த்தும் என்பது. முதனிலை திரிந்து ஆகுபெயராகிக்
காலம் உணர்த்தல் வந்துழிக் கொள்க. (பா. வி. பக். 229, 230)