சொல் தோன்றுதலுக்குக் காரணமான ஒலி எழுத்து எனப்படும். எழுத்து
என்பது கட்புலனாகா உருவும் கட்புலனாகிய வடிவும் உடையதாக வேறுவேறு
வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும்
ஓசையாம். (தொ. எ. 1 நச். உரை)
எழுத்தெனப்படுவது யாதோ எனின், கண் முதலாய பிறவற்றுக் குப்
புலனாகாது செவிப்புலனேயாகும் ஒலிவடிவும், செவி முதலாய பிறவற்றுக்குப்
புலனாகாது கண்ணுக்கும் மெய்க்கும் புலனாகும் வரிவடிவும் உடைத்தாய்,
தனித்து நின்றாயினும் சார்ந்து நின்றாயினும், தன்னை உணர்த்தலுடன் பொரு
ளுணர்த்தும் சொல்லாகலும் அச் சொல்லுக்கு உறுப்பு ஆகலும் ஆகிய இரு
தன்மையும் ஒருங்கு பெற்றாயினும், அன்றி உறுப்பாக இயைதல்தன்மை ஒன்றே
பெற்றாயினும் நிற்கும் ஒலியாம். (பா. வி. பக். 170)
காற்றுக் கட்புலனாகா உருவினதாயினும் மெய்ப்புலனாயுற்று இன்பதுன்பம்
ஆக்கலானும், இயங்குதலானும், மரம் முதலிய வற்றை இயக்கலானும், இக்காற்று
வலிது – இக்காற்று மெலிது – எனக் கூறப்படலானும், பொருள் என்று
கொள்வோம். அதுபோல, ஒலியும் உந்தி முதலாகத் தோன்றி, தலை – மிடறு –
நெஞ்சு – பல் – இதழ் – நா- மூக்கு – மேல்வாய் – என்ற எண்வகை நிலத்தும்
பிறந்து, கட்புலனாம் தன்மையின்றிச் செவிக்கண் சென்றுறும் ஊறு
உடைமையானும், இன்பதுன்பம் ஆக்க லானும், வன்மை – மென்மை – குறுமை –
நெடுமை – கோட லானும், விசும்பின்கண் இயங்குவதொரு தன்மை யுடைமை யானும்,
பேரொலிக்கண் மண் அதிர்தல் காணப்படலானும், காற்றால் காரியப்படும் தன்மை
யுடையதாகும். (பா. வி. பக். 171)
மொழிக்கு முதற்காரணம் ஆகின்ற அணுத்திரளின் காரியம் ஒலி எழுத்தாம்.
அணுத்திரள் என்றது நாதம். ஒலி என்றது அதன் காரிய ஒலி. அணு என்றது
ஒலிநுட்பத்தை. ‘அணுத் திரள் ஒலி எழுத்து’ எனின், முற்கு-வீளை – இலதை –
முதலிய குறிப்பிசைகளும் அணுத்திரளே ஆதலால் அவை எழுத் தாகாமையானும்,
‘மொழி முதற் காரணமாம் ஒலி எழுத்து’ எனின், அவ்வொலி இன்ன ஒலி என
விளங்காமையால், ‘நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப, எழும்
அணுத்திரள் ஒலி’ எனக் காட்ட வேண்டுதலானும் ‘மொழி முதற் காரண மாம்
அணுத்திரள் ஒலி எழுத்து’ என்றார். (நன். 58 இராமா.)