எழுத்துமுப்பத்துமூன்று எனல்

தொல்காப்பியனார் வடமொழியில் வல்லுநராய் ஐந்திரம் நிறைந்தவராயினும்,
தமிழ்மரபை யுட்கொண்டே, “தமிழ் மொழிக்குரிய எழுத்துக்கள் உயிர் 12,
மெய் 18 ஆகிய முப்பதுமே” என்றார். ஒரு மொழியைச் சார்ந்து வரும் இயல்பு
அன்றித் தனித்தியங்கும் இயல்பு தமக்கு இல்லை என்றலின் அவைதம்மை
எடுத்தோதிக் காட்டலாகாக் குற்றியலிகரம் – குற்றியலுகரம் – ஆய்தம் –
என்பன, தனித்து எழுதப்படா ஆயினும் மொழியொடு சார்த்தி எழுதப்படுதலின்,
எழுத்து என்னும் குறியீட்டுக்கு உரியன ஆதலின் அவற்றை ‘எழுத்து ஓரன்ன’
என்று குறிப்பிட்டு, அம்மூன்றனையும் சேர்க்கத் தமிழெழுத்து முப்பத்து
மூன்று என்று அவர் தெரிவித்தது தமிழ்மரபு பற்றியே என்பது. (தொ. எ.
1)