அகரமும் வகரஒற்றும் கூடி ஒளகாரத்தின் பயத்த ஆகலும், அகரமும்
யகரஒற்றும் கூடி ஐகாரத்தின் பயத்த ஆகலும் எழுத்துப் போலியாம்.
எ-டு : அவ்வை – ஒளவை எனவும், அய்யர் – ஐயர் எனவும் வரும்.
(நேமி. எழுத். 9)
மொழியிறுதியில் மகரத்திற்கு னகரம் போலியாக வரும். எ-டு : முகம்-
முகன்.
மொழி முதலிலும் இடையிலும் சகர ஞகர யகரங்களுக்கு முன் அகரத்துக்கு
ஐகாரம் போலியாக வரும்.
எ-டு : பசல் – பைசல், மஞ்சு- மைஞ்சு, மயல் – மையல்;
அரசு – அரைசு. இலஞ்சி – இலைஞ்சி, அரயர் – அரையர்
மொழி இடைக்கண் சிலவிடத்து ஐகாரத்தின் பின்னரும் யகர ஒற்றின்
பின்னரும் நகரத்துக்கு ஞகரம் போலியாக வரும்.
எ-டு:மைந்நின்ற – மைஞ்ஞின்ற – செய்யுள்
ஐந்நூறு – ஐஞ்ஞூறு – உலக வழக்கு
செய்ந்நின்ற – செய்ஞ்ஞின்ற – செய்யுள்
சேய்நலூர் – சேய்ஞலூர் – உலக வழக்கு (நன். 122- 124)