எழுத்துப்பொருள்படுமாறு

அகரம் முதல் னகரம் ஈறாகிய முப்பதுக்கும் எழுத்து என்பது
தனித்தனியாகவும் ஒரு சேரவும் பொதுப்பெயர். “எழுத்து என்பது ஒரு
பொருள்; அதற்கு அ ஆ – முதலியன பெயர்” என்பது பொருந்தாது. எழுத்து
என்பது முப்பதனுக்கும் பொதுப்பெயர் எனவே, குறில் – நெடில் – உயிர் –
வன்மை – மென்மை – இடைமை – என்பன சிறப்புப்பெயராம். (சூ. வி. பக். 19,
20)
எழுத்து என்னும் தொழிற்பெயர், அப்பொருளை விட்டுப் பால்பகா அஃறிணைப்
பொருட் பொதுப்பெயராய், அப் பொருளை விட்டு ஓவியம் முதலியன போல அன்றி
அகரம் னகரம் முதலிய வடிவை உணர்த்தும் சிறப்புப்பெயராய், அப்பொருளை
விட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்வொலியினது
இலக்கணத்தை உணர்த்தும் இருமடியாகுபெயராய், அப்பொருளை விட்டு
அவ்விலக்கணத்தை உணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடியாகுபெயராய்,
அப்பொருளை விட்டு ‘இங்ஙனம் கூறிற்று எழுத்து, இங்ஙனம் அறிவித்தது
எழுத்து’ எனக் கருமகருத்தாவையும் கருவிக்கருத்தாவையும் உணர்த்தும்
நான்மடியாகு பெயராய் நின்று பல பொருள் பட்டது. (இ. கொ. பக். 52)